Skip to content
Home » ஜனாதிபதியை நிற்கவைத்து, பிரதமர் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்து வெளியிடுவதா? கடும் எதிர்ப்பு

ஜனாதிபதியை நிற்கவைத்து, பிரதமர் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்து வெளியிடுவதா? கடும் எதிர்ப்பு

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கினார்.  இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமரும், அத்வானியும் உட்கார்ந்துகொண்டும், ஜனாதிபதி நின்றுகொண்டும் இருந்தபடி புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; “ஜனாதிபதியை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, ஜனாதிபதிதான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா?

இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து  உள்ளனர்.  பெண்கள் பற்றி மோடி பெருமையாக பேசிவரும் நிலையில் இந்தியாவின் முதல் குடியான ஜனாதிபதியை நிற்கவிட்டு, இவர் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்து வெளியிடுவது எந்த வகையில் பெண் சக்திக்கு மதிப்பளிக்கும் எனவும் சமூகவலைதளங்களில் நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!