கோவில்பட்டி: புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையை 25% உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். ஒரு கிலோ கடலை மிட்டாய் விலை ரூ.220-இல் இருந்து ரூ. 270-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் தமிழக மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் 120க்கு மேற்பட்ட கடலை மிட்டாய் உற்பத்தி ஆலயம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்யக்கூடிய முக்கியமான மூலப்பொருள்களான வெல்லம், கடலை பருப்பு ஏலக்காய், பேக்கிங் கவர் விலையேற்றத்தை சமாளிக்க முடியாத நிலையில் இன்று கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடலை மிட்டாய்கான விலையை 25% உயத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவைத் தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சேர்க்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக இருக்கிறது. அதேபோல வந்தே பாரத் ரயில்களிலும் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
