Skip to content
Home » பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1.35 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். பிற்பகல் 2.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, 2.55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனைய பகுதிகளை பார்வையிடுகிறார்.

மாலை 3 மணியில் இருந்து 3.15 மணி வரை, புதிய முனையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்பு மாலை 3.20 மணிக்கு காரில் புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.50 மணிக்கு, சென்னை ஐ.என்.எஸ் அடையார் (மெரினா கடற்கரை) சென்றடைகிறார். மாலை 3.55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு மாலை 4 மணியில் இருந்து 4.20 மணி வரை, சென்னை கோவை இடையே அதிவிரைவு ரெயிலான வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்பு மாலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் செல்கிறார். அங்கு மாலை 4.45 மணியில் இருந்து 5.45 மணி வரை, ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மாலை 5.55 மணிக்கு ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மாலை 6.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு, பல்லாவரம் அல்ஸ்டாம் இங்கிலீஸ் எலக்ட்ரிக்கல் ஆலை மைதானத்துக்கு வருகிறார். அங்கு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நடக்கும் விழாவில், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் நிறைவடைந்த திட்டத்தை தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின்பு இரவு 7.35 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். இரவு 7.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார்.

இரவு 8.40 மணிக்கு மைசூர் விமான நிலையம் சென்றடைகிறார். மறுநாள் 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி வருகிறார். அதன் பின்பு காலை 9.45 மணிக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.20 மணிக்கு, கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர் சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று இறங்குகிறார்.

பிரதமர் மோடி 8-ந்தேதி மதியம் முதல் இரவு வரை சென்னையில் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று பேச உள்ளனர்.

இதற்காக பாரதிய ஜனதா கட்சியினரும், தி.மு.க.வினரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சிக்காரர்களை திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். தி.மு.க. மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் நாளை (6-ந்தேதி) பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதே போல் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையும் 2 நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அதிக அளவில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இரு கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் திரளாக பங்கேற்க இருப்பதால் அதற்கேற்ப பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!