Skip to content
Home » சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

  • by Senthil

தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இந்த மாவட்டத்திற்கு சீனியரான   நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் என 2 அமைச்சர்கள் உள்ளனர்.  திருச்சியில்  விமான நிலையம் இருப்பதால் பக்கத்து மாவட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் திருச்சி வந்து செல்கிறார்கள்.

தமிழக அரசின் திட்டங்கள், அமைச்சர்களின் நிகழ்ச்சி விவரங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து  பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்காக  செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மாவட்டந்தோறும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். திருச்சி மத்திய மாவட்டம் என்பதால் இங்கு  செய்தி மக்கள் தொடர்புதுறைக்கு  உதவி இயக்குர் அதிகாரியாக உள்ளார். இந்த பதவியில் இருந்த உதவி இயக்குனர் செந்தில்குமார் 2 மாதங்களுக்கு முன்னர் பதவி உயர்வு பெற்று சென்னை சென்று விட்டார். அதன்பிறகு  மதுரையை சேர்ந்த சாலி தளபதி என்பவர் திருச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் திருச்சி அலுவலகத்திற்கு வரவில்லை. எனவே 2 மாதமாக அந்த பணியிடம் காலியாகவே உள்ள நிலையில் ஏபிஆர்ஓ என அழைக்கப்படும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி  சுதாகர்  என்பவர் தான் அந்த பணியை கவனித்து வருகிறார்.

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மாநில அளவிலான விழா திருச்சியில் நடந்தது. அத்துடன் மணப்பாறை உள்பட பல இடங்களில் விழா நடந்தது.  மேற்கண்ட விழாக்களை முடித்துக்கொண்டு முதல்வர்  மாலை 5 மணி அளவில் திருச்சியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைக்கு 6 மணிக்கு  சென்று விட்டார். ஆனால் முதல்வர் பங்கேற்ற விழா பற்றிய செய்தி மற்றும் புகைப்படங்கள் பத்திரிகையாளர்களுக்கு, பிஆர்ஓ அலுவலகத்தில் இருந்து 6.45 மணிக்கு தான் வந்தது. செய்திகளைகளை பத்திரிகையாளர்கள் நேரடியாக சென்று சேகரித்து விடுவார்கள். ஆனால் அரசு  விழாக்களின் சில முக்கிய  புகைப்படங்கள் அரசு சார்பில் தான் வழங்கப்படும். அந்த புகைப்படங்களும் 6.45 மணிக்கு தான் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது.

காரணம் இங்கு பொறுப்பான உயர் அதிகாரி இல்லை என்கின்றனர் பத்திரிக்கையாளர்கள். பிஆர்ஓ சுதாகரிடம் செய்தியாளர்கள் ஏதாவது ஒரு தகவல் கேட்டால், தெரியாது என்ற பதில் தான் வருகிறது என்றும்  குறிப்பாக மாவட்டத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரியை தொடர்பு கொள்ள போன் நம்பர் கேட்டால், இப்போது பிசியாக இருக்கிறேன், பிறகு பேசுங்கள் என கூறுவதாக பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் ஏபிஆர்ஓ சுதாகர் உடனடியாக பதில் அளிப்பது தான் வருத்தம் என்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்.  கவனிப்பார்களா? செய்தித்துறை அதிகாரிகள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!