Skip to content
Home » சிபிசிஐடி அலுவலகம் அருகே விபசார விடுதி…. மாநகராட்சி ஊழியர், மனைவி கைது

சிபிசிஐடி அலுவலகம் அருகே விபசார விடுதி…. மாநகராட்சி ஊழியர், மனைவி கைது

சேலம் நெடுஞ்சாலை நகர் அருகில் உள்ள கிருஷ்ணா தெருவில் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து 200 அடி தூரம் தள்ளி ஒரு வீட்டில் பாலியல் தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில், சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும், அதற்கு மூளையாக திவ்யா – பாலமுரளி என்ற தம்பதி செயல்பட்டதும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் திவ்யா – பாலமுரளி உள்பட 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  கடந்த 4 ஆண்டுகளாக திவ்யா சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக எச்ஐவி பிரிவில் பணியாற்றி வந்து உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகி உள்ளார். அதேபோல் அவரது கணவர் பாலமுரளி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் திவ்யா பணியாற்றி வந்தபோது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டு கணவர் இறந்ததும், தங்களுக்கும் எச்ஐவி பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் கவுன்சிலிங்கிற்கு அதிகமான பெண்கள் வந்துள்ளனர்.

திவ்யாவிற்கு ஏராளமான கடன்கள் இருந்ததால், அதனை சமாளிக்க கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களை வைத்து பணம் சம்பாதிப்பதற்கான வழியை யோசித்துள்ளார். அதன்படி கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களின் மனநிலை, அவர்களது வருமானம் ஆகியவற்றை அறிந்து கொண்ட திவ்யா அவர்களை மூளைச்சலவை செய்துள்ளார். திவ்யாவின் வலையில் சிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இதற்காகவே, தனது ஆண் நண்பர் தியாகராஜன் மூலம், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்து உள்ளார். பெண்களை, மூளைச்சலவை செய்து, வாடகை வீட்டிற்கு அனுப்புவதும், கணவர் பாலமுரளியும், தியாகராஜனும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதும் வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது.

ஒரு வாடிக்கையாளரிடம் 3 ஆயிரம் ரூபாய் பெறும் திவ்யா, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் திவ்யாவின் கணவர் பாலமுரளி, மாநகராட்சி ஊழியர் என்பதால் அலுவலகத்தில் தனது காரியங்களை சாதிக்க, மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பலருக்கும் விருந்தாக்கியுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் திவ்யா, அவரது கணவர் பாலமுரளி, உடந்தையாக செயல்பட்ட தியாகராஜன், சாமிவேல், மோகன் குமார், கவுசல்யா, தேவா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். பாலமுரளி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!