Skip to content
Home » மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

சர்வதேச அளவிலான “Umagine TN 2024” என்ற தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 “தகவல் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்குச் சொந்தக்காரர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் படித்தவர். பல ஆண்டுகள் வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரி அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்து கொண்டு இருப்பவர் அமைச்சர் பிடிஆர்.

திமுக ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பிடிஆர். அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம், ஐடி துறையிலும், நிதித் துறை போல் மாற்றங்கள் தேவைப்பட்டது. அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம். அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!