திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணி – போக்குவரத்து மாற்றத்தால் கிராம மக்கள் சாலை மறியல்; தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லணை பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி – சென்னை புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கியுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புப் பணிகள் சுமார் மூன்று மாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பாலம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
பாலம் மூடப்பட்டதன் காரணமாக, கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள், மாற்று வழியால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்து நெரிசல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
