Skip to content
Home » போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான இவர் பல்வேறு விவகாரங்களில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் 2015-ம் ஆண்டில் தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் சிங் கைராவை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைநகர் சண்டிகரில் உள்ள கைரா வீட்டுக்கு அதிகாலையில் சென்ற போலீசார், ‘போதைப்பொருள் வழக்கில் உங்களை கைது செய்ய வந்துள்ளோம்’ என கைராவிடம் கூறினார். அப்போது கைரைா, கைது வாரண்டை காட்டும்படி கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். இவை அனைத்தையும் கைராவின் மகன் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார். அதனை தொடர்ந்து, கைராவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனிடையே கைரா கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ், ஆம்ஆத்மி அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைராவை கைது செய்யும் அளவுக்கு போதைப்பொருள் வழக்கில் எந்த வகையான விசாரணையை பஞ்சாப் காவல்துறை நடத்தியது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. எனினும் காங்கிரசின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆம்ஆத்மி, எம்.எல்.ஏ. கைரா மீதான நடவடிக்கை சட்டத்தின்படி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜலாலாபாத் நகரில் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள், தங்க பிஸ்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, கைராவின் நெருங்கிய உதவியாளர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் கைராவை குற்றவாளியாக சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், 2017-ம் ஆண்டு கைராவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

எனினும் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைரா கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து கடந்த ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைராவுக்கு எதிரான சம்மன் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. இந்த நிலையில்தான் 2015-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கைராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!