காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று 105-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை இன்று அரியானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. ராஜஸ்தானில் இருந்து முன்டஹா எல்லை வழியாக யாத்திரை அரியானாவுக்குள் நுழைந்துள்ளது. அரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யாத்திரை அரியானாவுக்குள் நுழைந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ‘வெறுப்பு’ சந்தையில் ‘அன்பு’ கடையை திறக்கிறேன். தற்போது, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இடைவெளி உள்ளது. மணி கணக்கில் பேசவேண்டும்… மக்கள் பேசுவதை கேட்கத்தேவையில்லை என்று தலைவர்கள் நினைக்கின்றனர். இந்த பயணத்தில் நாங்கள் அதை மாற்ற நினைக்கிறோம்’ என்றார்.