Skip to content
Home » தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் இந்த கொலைச்சம்பவம்  தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (39), கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்(42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத்(32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவான இந்த 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இவர்களை பிடிக்க என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மேற்கண்ட 5 பேரின் புகைப்படங்கள், அடையாளங்களை அச்சடித்து நோட்டீஸ் மூலம் விநியோகித்தும், சுவரொட்டியாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலுள்ள பொது இடங்களில் ஒட்டியும் தேடி வருகின்றனர்.

அந்த சுவரொட்டியில், ‘வழக்கில் தேடப்படும் மேற்கண்ட 5 நபர்களின் புகைப்படம், வயது, முகவரி விவரம், மேற்கண்ட நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் ‘தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம் என்ற தகவலுடன் கைப்பேசி எண், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளனர். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், ஒரு குற்றவாளிக்கு 5 லட்சம் வீதம் 5 குற்றவாளிகளுக்கும் சேர்த்து 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!