நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல், மழை பாதிப்புகளை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது நாகையில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விசைப்படகினை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , பாதிக்கப்பட்ட மீனவருக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து திமுக சார்பில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு 60 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய அமைச்சர், படகு உரிமையாளருக்கு புயல் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம்
ரூபாய் மீன்வளத்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாகூர் அடுத்த தெத்தியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி, குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னையில் புயலால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், அங்கு நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும், புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் மாநகரம் முழுவதும் மழை நீர் வடிய துவங்கிவிடும் என்றார். ஆளும் அரசு மீது விமர்சனங்கள் எப்போதும் வந்து கொண்டு தான் இருக்கும் அதனை எல்லாம் புறம் தள்ளிவிட்டு மக்களை காக்கும் பணியில் அரசு முனைப்பாக உள்ளது என்றும், புயலுக்குப்பின் மக்கள் பயன்பாட்டிற்கு, சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து துவங்க அனைத்து நடவடிக்கையும் முதல்வர் எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 4000,ஆயிரம் கோடி ரூபாய் வீண் அல்ல! அது மக்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சி மற்றும் பாஜகவினரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.