Skip to content
Home » ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

  • by Senthil

நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸர் முகமது(35). இவர் சூப்பர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வந்தார். இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இவருக்கு ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த கலசலிங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு சாந்தி மற்றும் பார்வதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி சாந்திக்கு வைரமுத்து என்ற மகன் உள்ளார்.

அவர் சென்னையில் பணி செய்து வருகிறார். கலசலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில் கலசலிங்கத்திற்குச் சொந்தமான சொத்தை பெறுவதற்கு இரண்டாவது மனைவி பார்வதி முயற்சி செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அஸர் முகமது கடையில் பணி செய்த பேட்டை பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறி இருக்க இடம் இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை அஸர் முகமது ஏற்பாட்டின் பேரில் பார்வதி வீட்டில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஸர் முகமது, பார்வதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சொத்து மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அஸர் முகமதை அரிவாளால் வெட்டினர். இதனையடுத்து, அங்கிருந்து தப்பியோடிய அஸர் முகமதை பின் தொடர்ந்த மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி உள்ளனர். அப்போது பேட்டை விவிகே தெரு மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவை இணைக்கும் மேல தெருவில் அஸர் முகமது நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனைப் பயன்படுத்திய மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, அஸர் முகமது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பேட்டை போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அஸார் முகமது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணகுமார் மற்றும் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கிடைத்த பொருட்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு கொலைக் குற்றத்திற்கு காரணமானவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்திற்கு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா, ரியல் எஸ்டேட் பிரச்சனையா, பெண் விவகாரம் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் பார்வதியை பகவதியை பேட்டை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தீவிர விசாரணையும் நடத்தினர். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!