Skip to content
Home » மகளிர் இட ஒதுக்கீடு…கபில்சிபல் எழுப்பும் சந்தேகங்கள்

மகளிர் இட ஒதுக்கீடு…கபில்சிபல் எழுப்பும் சந்தேகங்கள்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய சட்ட மந்திரியாக இருந்த கபில்சிபல், அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகினார். சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்ததா என்பது சந்தேகமாக இருக்கிறது. உண்மையான அக்கறை இருந்திருந்தால், 2014-ம் ஆண்டிலேயே நிறைவேற்றி இருக்கும்.  நிச்சயமாக, 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது. ஏனென்றால், 2026-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்கினாலும், அதை முடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிடும். சாதிவாரியான விவரங்களை அதில் சேர்க்க வேண்டும் என்று வடமாநிலங்களில் பலத்த கோரிக்கை எழுந்துள்ளது. அந்த கோரிக்கையை நிராகரித்தால், வடமாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை தழுவும். எனவே, கோரிக்கையை ஏற்று, சாதிவிவரங்களை சேர்த்தால், இன்னும் தாமதம் ஆகும்.

அதன்பிறகு தொகுதி மறுவரையறை பணி பெரிய அளவிலானது. அதற்கு இன்னும் தாமதம் ஆகும். எனவே, 2034-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும். 5 மாநில சட்டசபை தேர்தல்களையும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் வைத்துத்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். ஏதாவது ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு, நாடாளுமன்ற தேர்தல்வரை ஓட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். இல்லாவிட்டால், சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டிய அவசியம் இல்லையே?

2014-ம் ஆண்டே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே என்று சபையில் கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை. இந்த மசோதா, பா.ஜனதாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பலன் அளிக்கலாம், அல்லது பலன் அளிக்காமல் போகலாம். ஆனால், 2014-ம் ஆண்டே ஏன் கொண்டுவரவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்ப வேண்டும். மக்களவையில் பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி பேசியது போன்ற அநாகரிக வார்த்தைகளை எனது 30 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் பார்த்தது இல்லை. அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!