சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து 10 க்கும் மேற்பட்டோரை கைதுசெய்தனர்.
அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர்களே ஆஜராகி, விளக்கம் அளித்து வந்தனர். இதனிடையே துபாயில் இருந்து சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ் நேற்று காலை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் துருவி துருவி போலீசார் விசாரணை செய்தனர்.
ரூசோவிடம் பெற்ற பணத்தை திரைப்படத்துக்கு மட்டுமல்லாமல் சொந்த செலவுக்கும் ஆர்.கே.சுரேஷ் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை டிச.18-ல் போலீசார் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளனர். தயாரிப்பாளர் ரூசோ-சுரேஷ் இடையே உள்ள சினிமா பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை எடுத்துவர ஆர்.கே.சுரேஷிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 2-வது நாளாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது.