போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார். கிளப் நிர்வாகம், மேலாளர் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வெளியேறினார் ரொனால்டோ.இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பல கிளப் அணிகள் போட்டியிட்டன. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியில் ரொனால்டோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் படி அவர் ஆண்டுக்கு 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1770 கோடி) பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார். புதிய அணியில் இணைந்தது குறித்து ரொனால்டோ கூறியதாவது:- ஐரோப்பிய கால்பந்தில் நான் பெற்ற வெற்றியால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். எனது புதிய அணியின் வீரர்களுடன் இணைவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து வெற்றியை அடைய உதவுவேன் என்றார். அல்-நசர் கிளப் அணி டுவிட்டரில் கூறும் போது, வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எங்கள் கிளப் இன்னும் பெரிய வெற்றி அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், தேசம், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் ஒரு கையொப்பமாகும். ரொனால்டோவை வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.