திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தீபக் (31). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வைஃபை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மாம்பழச் சாலையை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும் மதனகுரு என்பவரும் நண்பர்களாக அறிமுகமாகினர். இவர்கள் இரண்டு பேரும் தீபக்கிடம் தங்களுக்கு சமயபுரம் கோவிலில் உறவினர்கள் இருப்பதாகவும் நாங்கள் உங்களுக்கு கோவிலில் சுகாதாரப் பணி, உதவியாளர் அல்லது காவலாளி என மூன்றில் ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை உண்மை என நம்பிய தீபக், மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ள அவர்களிடம் ரூபாய் 30 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை ரொக்கமாக கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட மதுமிதா மற்றும் மதனகுரு ஆகிய இருவரும் வெகு நாட்கள் ஆகியும் பணத்தையும் திருப்பித் தராமல் வேலையும் வாங்கி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்தை உணர்ந்த தீபக் இது குறித்து திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் நலம் பாதித்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை..
திருச்சி பொன்மலை கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 67 ) இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக கடந்த இரண்டு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி சாவு
திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 86 ) .இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்ததாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்தபோது உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
