கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்வு காண்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமரசம் 3.0 என்ற சிறப்பு

இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இப்பேரணியை, மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சமரச மையத்தின்

தலைவருமான சுமதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, சமரசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மாவட்ட

நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய சாலைகள் வழியாகச் சென்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறைவடைந்தது.
பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைத்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் சமரசத் தீர்வுகள் அமையும் என்பதையும், இரு தரப்பினரும் இணக்கமான முடிவை எட்டுவதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் அமைந்திருந்தன.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், இரு தரப்பினருக்கும் ஏற்ற வகையிலும் சமரசத்தின் மூலம் தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
