Skip to content
Home » சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

  • by Senthil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், இலங்கை பிரஜை என்பதால் அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை தமிழரான சாந்தன்(52) கடந்த ஜன.24ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் பலமுறை கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த பிப். 23-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலை 7.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாந்தன் திருச்சி முகாமில் உயிருடன் இருக்கும்போதே, இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும். எனவே இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, சாந்தன் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. விரைவில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிபதிகளிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் தான் நேற்று சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சாந்தன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு இருவரும், சாந்தனை இலங்கை அனுப்ப அனுமதி வழங்கியது எப்போது என்றும் மத்திய அரசிடம் வினா எழுப்பினர். மத்திய அரசு தரப்பிலோ, கடந்த ஜனவரி 22-ம் தேதியே அவருக்கு இலங்கை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், “மத்திய அரசு ஜனவரி 22ம் தேதியே அனுமதி அளித்த பிறகும் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை” என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “ஜனவரி 24ம் தேதி முதலே சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நடக்க கூட முடியவில்லை என்பதற்காகவே இலங்கை அனுப்ப முடியவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

தமிழக அரசின் விளக்கத்துக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், “சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

சாந்தனின் உடலை கொண்டுசெல்வதற்கான இலங்கை தூரதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடலை பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவற்றை பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!