Skip to content
Home » விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

  • by Senthil

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். சாலி கிராமம் வீடு மற்றும் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டதால் நெரிசல் உண்டானது.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நெரிசலுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். இதன் காரணமாக தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலுக்கு மாற்றப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வர முடியாதவர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று அவரது நெருங்கிய நண்பரும், சமக தலைவருமான நடிகர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சாலி கிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “விஜயகாந்த் மறைந்தபோது நான் வெளிநாட்டில் இருந்ததால் என்னால் உடனடியாக வர முடியவில்லை. விஜயகாந்த் மறைந்த தினத்தை கறுப்பு நாளாகவே நான் கருதுகிறேன். என்னுடைய வாழ்க்கையில் மிக சோதனையான காலகட்டத்தில் விஜயகாந்தை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பு இன்றளவும் என்னால் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்தது.

புலன் விசாரணை படத்தில் நடிக்க வைத்ததோடு, தொடர்ச்சியாக 5 திரைப்படங்களில் என்னை நடிக்க வைத்தார். ஒரு கதாநாயகனாக தனக்கு போட்டியாக வந்துவிடுவேனோ என்ற எண்ணம் இல்லாமல் அவர் தயாரிக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தார். நான் பார்த்ததில் சிறந்த மனிதராகவே விஜயகாந்தை கருதுகிறேன். அவர் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவார் என்று எண்ணியிருந்தோம். அவர் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது” என்று தெரிவித்தார்.

அவருடன் நடித்த காலகட்டங்கள், நடிகர் சங்கத்தில் ஒன்றாக பணியாற்றிய காலகட்டம், உணவருந்திய நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன். விஜயகாந்த் உடல்நலமில்லாமல் இருந்தபோதே வருத்தமாக இருந்தது. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விஜயகாந்தின் 40வது ஆண்டு கலைவிழாவுக்கு என்னை அழைத்தார். நானும் விழாவில் அவருடன் அருகில் அமர்ந்து கலந்துகொண்டேன். விஜயகாந்த் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஜயகாந்த் என்றும் நம் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!