Skip to content
Home » பொ.செ பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லுமா?.. இன்று தீர்ப்பு…

பொ.செ பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லுமா?.. இன்று தீர்ப்பு…

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு இடைக்காலப் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் கடந்த 2017-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும், அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், புதிதாக பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தும் சசிகலா சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமியும் தாக்கல்செய்த மனுவை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலா தொடர்ந்திருந்த வழக்கை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரானமூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், கடந்த 2017-ல் நடந்த அதிமுகபொதுக்குழு கட்சி விதிகளின்படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் பொதுச் செயலாளராக பதவி வகித்த சசிகலாவை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் தன்னிச்சையான முடிவு. சசிகலா தற்போது வரை அதிமுகவின் உறுப்பினர்தான் என வாதிட்டிருந்தார். பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆகியோர், கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்கெனவேஅங்கீகரித்துள்ளன. உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுக் கூட்டத்தில்தான் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, என வாதிட்டனர். இதேபோல ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜரானார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பைதேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்தவழக்கில் வி.கே.சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!