மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராம கடற்கரை பகுதியில் இன்று காலை உலோகத்தால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் ஒன்றை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே அபாயகரமானது,தொடாதீர்கள்,காவல்துறைக்கு தெரிவியுங்கள் என அச்சிடப்பட்டுள்ளது. இதனை கண்ட மீனவர் கிராம மக்கள் அது வெடிக்கக் கூடிய தன்மை உடைய பொருளாக என அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர் .அதன்படி அங்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.அந்த உருளை குறித்து வெடி பொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.இதனால் நாயக்கர் குப்பம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.