Skip to content
Home » தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

  • by Senthil

நெல், வாழை, கரும்பு, தென்னை மற்றும் இதர தானியங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் சிரமங்களை கடந்து விவசாயம், மீன்பிடி தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக செங்கல் உற்பத்தியும் ஆங்காங்கே நடக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத வேளையில் மழை பெய்ததால், நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. பருவம் தவறி மழை பெய்வது தொடர்ந்து நீடிப்பதால் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுடன் செங்கல் உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது

தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக இந்த நேரத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கும். தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக திடீர், திடீரென மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் செங்கல் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மெலட்டூர், சுரைக்காயூர், கோடுகிளி, ஒன்பத்துவேலி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மழையால் செங்கல் உற்பத்தி செய்யும் பணி அடியோடு பாதிக்கப்பட்டு, செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வருவாய் கிடைக்காமல் வாடும் நிலை ஏறபட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்:

பொதுவாக கோடை காலத்தில் தான் எங்களுக்கு செங்கல் தயார் செய்ய முடியும். 2 பேர் சேர்ந்து ஆயிரம் பச்சைக்கல் தயார் செய்யலாம். 2, 3 நாட்கள் நன்றாக வெயிலில் காயவைத்து கொட்டகையில் அடுக்கி வைத்தால் தான் எங்களுக்கு ரூ.1,000 வரை கூலியாக கிடைக்கும். தற்போது தினசரி பெய்து வரும் மழையால் கடந்த சில நாட்களாக தயார் செய்து வைத்த பச்சைக்கல் எல்லாம் நனைந்து சேதமடைந்து விட்டது. தொடர்ந்து கல் தயார் செய்யவும் முடியவில்லை. மழை அச்சுறுத்தல் இருப்பதால் தயார் செய்த பச்சைக்கல்லையும் காய வைக்க முடியவில்லை. அதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!