Skip to content
Home » டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்

டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்

  • by Senthil

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி. முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக  பணியாற்றியவர்  ஷர்மிளா. இவரை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த  23ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி  ஷர்மிளாவின்  பஸ்சில் பயணித்தார். அப்போது  அவர் ஷர்மிளாவக்கு  வாழ்த்துக்கள் கூறி பொன்னாடை போர்த்தினார். இந்த  நடவடிக்கை அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பிடிக்காத நிலையில் அவர் கனிமொழி எம்.பியிடமும், அவருடன் வந்த மற்ற பெண்களிடமும்  கடுமையாக நடந்து கொண்டார். இதனால் கனிமொழி எம்.பி. பாதி வழியிலேயே அந்த பஸ்சில் இருந்து இறங்கினார்.

இந்த நிலையில் உடனடியாக அந்த பஸ் கம்பெனி உரிமையாளர் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கினார். அத்துடன்  நீ உன்னுடைய பாப்புலாரிட்டிக்காக பஸ் ஓட்டுகிறாய் எனவும் கூறினார்.  பஸ் உரிமையாளரின் இந்த கடுமையான நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது.  இந்த நிலையில் ஷர்மிளாவுக்கு உதவ பலர் முன்வந்தனர்.

இந்த நிலையில் மநீம கட்சித்தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு ஒரு காரை பரிசாக வழங்கினார். இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கை”

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலானபணியை திறம்படச் செய்து வந்தார் அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப்பெற்றுள்ளார்.

தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல பல்லாயிரம் ஷர்மிளாக்களைஉருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு கமல் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!