நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டில்லி சென்று பயிற்சி பெற்றனர். பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியதும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும்.
இதில் ஒரு கப்பல், நாகப்பட்டினத்தில் இருந்து காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகம் நோக்கி செல்லும். எதிர் திசையில் இலங்கையில் இருந்து மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி கப்பல் புறப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு ஒரு கப்பல் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுள்ளது. 400 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு இந்த கப்பல் (இன்று ) வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு வந்ததும் சோதனை அடிப்படையில் 6ம் தேதி (நாளை) நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை முறையில் தொடங்கப்படும். அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவு பெற்று, ஜனவரி மாதம் முதல் முழுமையாக பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். என்று கூறினர்.