மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன் 32 வயதுடைய இளைஞர். இவரது தந்தை கலியமூர்த்தி தனது மனைவி தேவியை பல ஆண்டுகளாக பிரிந்து வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் அய்யப்பன் தனது தாயார் மற்றும் தாத்தா பிச்சமுத்து(80) மற்றும் பாட்டி சந்திரா (75) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேலைவாய்ப்பு இன்றி மனஉளைச்சலில் இருந்துவந்த பொறியியல் பட்டதாரி அய்யப்பன் கஞ்சா போதைக்கு ஆளாகியுள்ளார். இத்தகைய சூழலில் இன்று அதிகாலை தனது தாத்தா மற்றும் பாட்டி தூங்கிகொண்டிருந்தபோது கஞ்சாபோதை தலைக்கு ஏறிய பேரன் அய்யப்பன் தனது தாத்தா மற்றும் பாட்டியை பீர் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொடூராமாக கொலைசெய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த எண்ணெய்யினை ஊற்றி தனது தாத்தா, பாட்டி மீது தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதில் பிச்சமுத்து மற்றும் சந்திரா ஆகிய முதியவர்கள் இருவரும் உடல் கருகினர்.
இதுகுறித்து வடுவூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலிசார் உயிரழந்த பிச்சமுத்து மற்றும் சந்திரா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக அய்யப்பனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வடுவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது சொந்த தாத்தா, பாட்டியை கஞ்சா போதைக்கு ஆளான பேரன் அடித்து கொலைசெய்துவிட்டு பின்னர் வீட்டில் இருந்த எண்ணெய்யினை ஊற்றி தீவைத்து கொளுத்திய கொடூர செயல் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி பகுதிகளில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது இது குறித்து மன்னார்குடி காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
