Skip to content
Home » அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணிகள் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல். திருமாவளவன், தற்பொழுது நடைபெறும் தேர்தல் 2 கட்சிகளுக்கு இடையே அல்லது இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், மற்றொருபுறம் இந்திய நாட்டிற்கு எதிராக உள்ள சங்பரிவார் அமைப்புகள் இடையே நடக்கும் தர்ம யுத்தம் இந்த தேர்தல். நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய கூட்டணி செயல்படுகிறது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க கூடிய சங்பரிவார அமைப்புகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியா கூட்டணி களத்தில் இருக்கிறது
. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருபுறம் கூட்டணி பலம், திமுக தலைமையிலான அரசு மூன்றாண்டில் செயல்படுத்திய திட்டங்கள், இந்தியா கூட்டணி நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயக பாதுகாப்பு என்ற கருத்தியல் பலம் ஆகிய மூன்றும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கின்றது. எனவே பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை மீட்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து தொடங்குகிறோம் என்பதற்கான நாள்தான் இந்த வாக்குப்பதிவு. தமிழக மக்கள் இந்தியா கூட்டணி பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும், அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தூக்கி எறியப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

நீண்ட வரிசையில் நின்று பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர் என்பது குறித்து கேட்டபொழுது,
பெண்கள் திமுக அரசின் மீது நல்ல மதிப்பை கொண்டுள்ளனர். மாதத்திற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. டெல்லியில் இந்தியா கூட்டணி மலர்ந்தால்தான், இந்தத் திட்டம் தொடரும். இதை மகளிரும் உணர்ந்து உள்ளனர். டெல்லியில் பாசிச பாஜக ஆட்சி மீண்டும் தொடர்ந்தால், பாஜக ஆளாத மாநிலங்கள் கலைக்கப்படும். அந்த நிலை தமிழகத்திற்கும் ஏற்படும். அப்பொழுது பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை நிறுத்தப்படும். பெண்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாதிரி வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவிற்கு வாக்குகள் விழுந்தது குறித்தும், அதை தேர்தல் ஆணையம் மறுத்தது குறித்தும் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து தொல். திருமாவளவன் கூறியது,

தேர்தல் ஆணையம் இதை மறுத்து கூறிய போதும், டெல்லி பாஜக அரசிற்கு தேர்தல் ஆணையம் தொடர்ந்து சாதகமாகவே இருப்பதாக அனைத்து தரப்பிலும் குற்றம் சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியே தொடர்ந்து செயல்படும் என்று அவர்கள் நம்பி இருக்கலாம். ஆனால் இந்த நாளில் இருந்து தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எந்த சார்பும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று கூறினார்.

மேலும் மற்ற மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நேரில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் தொடர உள்ளேன் என்று தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!