அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக, தமாகா, ஐஜேகே, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல கட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இவர்களில் அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு எப்படியும் ஒரு தொகுதியாவது தருவார்கள். போட்டியிடலாம். மத்திய அரசு நமக்கு இருப்பதால், தேர்தல் செலவு பற்றி கவலையில்லை என்ற நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
ஆனால் திடீரென நேற்று மாலை அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போட்டியிட ஒரு சீட் கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் இப்படி போய்விட்டதே கூட்டணி என்ற கவலை அவர்களை ஆட்க்கொண்டது.
கூட்டணி முறிவு குறித்து இவர்களில் பலர் கருத்து தெரிவிக்கவே மறுத்து விட்டனர். குறிப்பாக பாரிவேந்தர், ஏசி சண்முகம் ஆகியேேர் இது குறித்து எந்த கருத்தையும் சொல்லவில்லை. அதே நேரத்தில் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ஜி.கே. வாசன் ஆகியோர் இது துரதிர்ஷ்டவசமானது. எப்படியும் மீண்டும் இணைந்து விடும் என்ற தொனியில் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது உடைந்த கண்ணாடி, இனி ஒட்டவைக்க முடியாது என்று அதிமுக சொல்கிறது. பாஜக எப்படியும் தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் இன்னமும் இருக்கிறது.கூட்டணியை முறித்ததாக அதிமுக அறிவித்தவுடன், இரு கட்சிகளுமே பரஸ்பரம் நன்றி மீண்டும் வராதீர்கள் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். கூட்டணி முறிவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லை. தேசிய தலைமை தான் கருத்து சொல்லும் என நழுவிக்கொண்டனர்.
அதே நேரத்தில் ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். காரணம் இந்த கூட்டணி முறிவுக்கு மூலகாரணம் இவர்கள் தான் என பேசப்படுகிறது. இவர்கள் இருவரையும் பாஜ சின்னத்தில் போட்டியிட வைக்க அண்ணாமலை விரும்பியதாகவும் அதனால் தான் எடப்பாடி இதை கடுமையாக எதிர்த்து கூட்டணியை முறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இவர்களும் இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாத கவலையில் தான் இருக்கிறார்கள்.
தேமுதிகவை கடந்த சில வருடங்களாக அதிமுகவும், பாஜகவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இப்போது அந்த கூட்டணி உடைந்ததில் தேமுதிகவுக்கு உள்ளூர மகிழ்ச்சி என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இந்த முறிவு நீடித்தால் இருவரில் ஒருவர் தங்களை தேடி வருவார்கள் என அந்த கட்சி அரசியல் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறது.
பாமக – நாங்கள் டில்லியில் என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது. எனவே அந்த கட்சி தொடர்ந்து பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்றாலும் கூட்டணி முறிவு குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை.
மற்ற சிறிய கட்சி தலைவர்கள் அதிமுக பக்கம் போகவா, பாஜக பக்கம் சாயவா, அல்லது அப்படியே சில மாதங்கள் சைலண்ட் மோடில் இருப்பதா என்ற குழப்பதில் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. அதற்குள் இந்த காட்சிகள் மாறுமா? அல்லது இதே நிலை தான் தொடருமா என்பதற்கு வரும் காலங்கள் தான் பதில் அளிக்கும்.