Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிரைவர் மரணத்திற்கு நீதி கேட்டு போலீஸ் வாகனத்தின் கீழ் படுத்த மகன்!- பரபரப்பு

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். லாரி ஓட்டுநரான இவர், ஏலக்காய் மூட்டைகளை மதுரைக்கு ஏற்றி வந்த போது லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது. இது தொடர்பாக அவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே, இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக பாலகிருஷ்ணனை, செக்கானூரணி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சூழலில், கடந்த 14 ஆம் தேதி அதிகாலை, காவல் நிலையக் கழிவறையில் அவர் உயிரிழந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் பாலகிருஷ்ணனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று அறிக்கை வெளியானது. அதில், அவரது உடலில் 5 இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது தாயார், மகன், மாமியார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், உறவினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று தங்களது வாகனங்களில் ஏற்றினர்.

அப்போதும் காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை மதுரை பி.பி.குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் முயன்றனர். ஆனால், காவல் வாகனத்தை இயக்க விடாமல் உள்ளிருந்தபடியே உறவினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்ததால் பூங்கா முருகன் கோவில் அருகே வாகனம் நிறுத்தப்பட்டது.

முன்னதாக, பாலகிருஷ்ணனின் மகன் போலீசாரின் வாகனத்துக்கு கீழே சென்று படுத்துக் கொண்டார். அவரையும் போலீசார் கஷ்டப்பட்டு வெளியே இழுத்து வந்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

error: Content is protected !!
Secret Link