Skip to content
Home » பாடல் யாருக்கு சொந்தம்….. கவிஞர் வைரமுத்து மீண்டும் பிரச்னையை கிளப்புகிறார்

பாடல் யாருக்கு சொந்தம்….. கவிஞர் வைரமுத்து மீண்டும் பிரச்னையை கிளப்புகிறார்

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் ‘படிக்காத பக்கங்கள்’.   இந்த  திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ஒரு பாடலில், இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் அது பாட்டு.

சில நேரங்களில், இசை சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப்புரிந்து கொண்டவன் ஞானி. இதைப்புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி. இவ்வாறு அவர்  பேசினார்.

இதனை கண்ட ரசிகர்கள் இளையராஜாவை விமர்சித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளதாக இணையத்தில் பதிவிட்டனர். இதற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன், வைரமுத்துவை எச்சரித்து பேசி வீடியோவை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் இனிமேல் இளையராஜாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது. இவ்வாறு பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த பரபரப்பு அடங்கும் நிலையில், மீண்டும் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக சாடி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள் அந்த உழைப்பு உரிமை பெற்றநாள் இந்த நாள் தூக்குக் கயிற்றுக்குக் கழுத்து வளர்த்தவர்களும் .குண்டுகள் குடைவதற்காக நெஞ்சு நீட்டியவர்களும் வீர வணக்கத்துக்குரியவர்கள் .இந்த சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை

எழுத்து வைரமுத்து.  இசை இளையராஜா ,குரல் ஜேசுதாஸ். இந்த பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!