Skip to content

பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (ஜன.15) அதிகாலை நேரத்தில் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கறுப்பு நிற எஸ்யூவி வாகனங்கள் சைரனை ஒலித்தபடி அதிபர் மாளிகை வளாகத்தை விட்டு வெளியேறின. கடந்த மாதம் அந்த நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் அதிபரின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பையடுத்து யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

இறுதிவரை இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக போராடுவேன் என யூன் சாக் யோல் கடந்த மாதம் சொல்லி இருந்தார். சியோல் நகரில் உள்ள ஹன்னம்-டோங் இல்லத்தில் அவர் கடந்த சில வாரங்களாக தங்கி இருந்தார். ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது நியாயம் என்றே சொல்லி இருந்தார். அதே நேரத்தில் இது தொடர்பான விசாரணைக்கு தானாக முன்வந்து யூன் சாக் யோல் ஆஜராவார் என அவரது தரப்பு வழக்கறிஞராக தெரிவித்தனர்.

இருப்பினும் இது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு அவர் ஆஜராகவில்லை. இந்தச் சூழலில் கடந்த 3-ம் தேதி அவரை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதை தடுத்தனர். இந்நிலையில், பெரிய படையை திரட்டி இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!