Skip to content
Home » மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் மிகப்பெரியது மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.  சேலம் மாவட்டம் மேட்டூரில் இது அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.45டிஎம்சி.  கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு வருகிறது. கபினி அணை நிறைந்தால் அந்த உபரி நீர்  நேரடியாக மேட்டூர் அணைக்கு  வரும்.

இதுபோல கர்நாடகத்தின் பெரிய அணையான  கிருஷ்ணராஜசாகர் அணை   காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை நிரம்பினாலும் உபரி நீர்  மேட்டூருக்கு தான் வரும்.  இந்த இரு அணைகளுக்கும்  நீர் ஆதாரம் தென்மேற்கு பருவமழை தான்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் இருந்து செப்டம்பர் வரை  தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு  தென்மேற்கு பருவமழை  சற்று தாமதமாகத்தான் தொடங்கியது.  ஆனால் கர்நாடகத்திற்கு வடக்கே  உள்ள கோவாவில் இருந்து காஷ்மீர் வரை தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

ஜூலை 1ம் தேதி வரை  கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிக குறைவாகவே பெய்துள்ளது. இதுபோல கேரளாவிலும் வயநாடு பகுதியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 60% குறைவாகவே பெய்துள்ளது. அதிலும்  குறிப்பாக வயநாடு பகுதியில் மழை  குறிப்பிடும்படி இல்லை.

கடந்த ஆண்டு கேரளா, கர்நாடகத்தில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் ஜூன் மாதமே தென்மேற்கு பருவமழை அதிக மழைப்பொழிவை தந்தது. இதனால் கடந்த ஆண்டு மே மாதமே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.  ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12ல் தான்  திறக்கப்பட்டது.  அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 103அடியாக(65 டிஎம்சி) இருந்தது.

இன்றைய( ஜூன் 1) நிலவரப்படி, அதாவது 19 நாளில் அணையின் நீர்மட்டம் 89 அடியாக குறைந்து விட்டது. தினமும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக  சராசரியாக 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.  இன்று அணையில் 52 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது. தினமும் 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால் , மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர்  இன்னும் 50 நாட்களுக்கு தான் போதுமானதாக இருக்கும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நடவுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.  தற்போதுள்ள தண்ணீர் குறுவைக்கு போதுமானது என்றாலும், டெல்டாவில் சுமார் 10லட்சத்துக்கும் அதிகமான பரப்பில் சம்பா சாகுபடி தான் நடைபெறும்.

குறுவை அறுவடை முடிந்தவுடன், அக்டோபர் மாதத்தில்  சம்பா, தாளடி பணிகள் நடைபெறும். அதற்கு எப்படியும் 90 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். அத்துடன் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையும் இதற்கு பயன்படுத்தப்படும்.  இந்த மாத இறுதிக்குள்  கர்நாடக அணைகளில் இருந்து  மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராவிட்டால் மேட்டூர் அணை ஆகஸ்ட் மாதம் வறண்டு போகும் நிலை ஏற்படும்.

காரணம் மேட்டூர் அணை  16 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுகிறது. எனவே அணையின் நீர்மட்டம் 15 அடியாக குறைந்து விட்டால் அதன்பிறகு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை  ஏற்படும்.

இன்றைய நிலவரப்படி  கர்நாடகத்தின் கே. ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம்77.96அடி(மொத்தம் 124.8அடி) கபினி அணையின் நீர்மட்டம் 31.98அடி(மொத்தம் (65அடி).  இந்த இரண்டு அணைகளும் நிரம்பும் நிலை வந்தால் தான், அணையின் பாதுகாப்பு கருதி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிலை உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி  மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு மேட்டூருக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டு இருந்தாலும், கா்நாடக அரசு அதன்படி  விடுவதில்லை. அங்கு காங்கிரஸ் அரசு இருந்தாலும் சரி, பாஜக அரசு இருந்தாலும் சரி, குமாரசாமி அரசு இருந்தாலும் சரி, தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் மூவருக்கும்  ஒரே நிலைப்பாடு தான்.

எனவே கே. ஆர்.எஸ், கபினி நிரம்பினால் தான்  மேட்டூருக்கு தண்ணீர் கிடைக்கும். கர்நாடகத்திலும், கேரளத்தின் வயநாடு பகுதியிலும் 10 நாட்கள் மிககனமழை கொட்டினால் தான் அந்த அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூருக்கு கிடைக்கும்.  ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமான பொழிவை தராவிட்டால்  தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கமான அளவு  தென்மேற்கு பருவமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தபோதிலும் கடந்த மாதம்  ஏமாற்றம் தான் . ஜூலை மாதமும் அதே நிலை நீடித்தால் தமிழகத்தில் , குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்  விவசாயம் பாதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!