கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில்
பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது. இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
காவிரியில் தண்ணீர் பற்றாக் குறையோ அல்லது வறட்சியோ நேரும் சமயங்களில், இங்குள்ள சிவபெருமானுக்கும், அகத்தியருக்கும் சிறப்பு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் உரிய பலன் கிடைத்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நூறு அடிக்கு குறையாமல் இருந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்கி வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில்,
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்து, மேட்டூருக்கு தண்ணீர் வரவேண்டும் என்கின்ற பிரார்த்தனையை முன்வைத்து, இன்று காலையில் வேப்பத்தூர் அருள்மிகு அகஸ்தீஸ்வரருக்கும் சிவலிங்கத்திற்கும், அகத்திய முனிவர் மூர்த்திக்கும் காவிரி நீரைக் கொண்டு
சிறப்பு அபிஷேகம், வழிபாடு, திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.
இதில் கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு பிரார்த்தனையை முன்வைத்தும், உலக நலன் வேண்டியும் சங்கல்பம் செய்து கொண்டார்.
மனித வளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் சபாபதி, முருகன், ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.