தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக பெரும் விவாதப் பொருளாக நீடித்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஜராகி வந்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் இருவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, புதிய வழக்கறிஞர்களை உடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளை சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கின் விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பில் வலுவான வாதங்களை முன்வைப்பதற்காகச் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த சூழலில், இந்த திடீர் ராஜினாமா சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கை அரசுத் தரப்பில் முன்னெடுத்து நடத்தி வந்த முதன்மை வழக்கறிஞர்கள் இருவர் தங்களது ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்த விபரம் நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
வழக்கறிஞர்கள் இல்லாத சூழலில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர முடியாது என்பதால், காலதாமதமின்றி புதிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், புதிய வழக்கறிஞர்கள் நியமனம் மற்றும் அடுத்தகட்ட விசாரணைகளுக்காக வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
