Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்!

கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2026-27-ம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவ தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் தலைமை தாங்கி கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.

இதில் சர்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலரும் செயலாட்சியருமான மேனகா, மாவட்ட வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 2026-27-ம் ஆண்டு அரவை பருவத்தில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சுமார் 80,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.3,514.72 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழக அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையும் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு மொத்தம் ரூ.4,224.22 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025-26-ம் ஆண்டு அரவை பருவத்தில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய 1,447 விவசாய அங்கத்தினர்களுக்கு, ஒரு டன் கரும்புக்கு ரூ.709.50 வீதம் மொத்தம் ரூ.5.52 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா மற்றும் கரும்பு விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ் கரும்பு நற்று நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6,250, ஒரு பரு கரணை மூலம் நடவு செய்பவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2,000, அகலப்பார் முறையில் கரும்பு நடவு செய்பவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1,200 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கரும்பு சாகுபடியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நடவு பருவத்தில் நான்கரை அடி முதல் ஐந்து அடி இடைவெளியில் அகலப்பார் அமைத்து ஒற்றை வரிசையில் கரும்பு நடவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் களை எடுத்தல், மண் அணைத்தல் சோகை உரித்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் முதல் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்வது வரை அனைத்து பணிகளையும் நவீன வேளாண் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ள முடியும்.

இதனால் மனித உழைப்பின் தேவை குறைவதுடன் சாகுபடி செலவு மற்றும் கரும்பு வெட்டுக் கூலியில் 50 சதவீதத்திற்கும் மேல் செலவை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

எனவே சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாய அங்கத்தினர்கள் அகலப்பார் முறையில் கரும்பு நடவு செய்து பயன்பெற முன்வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்விழாவில் அலுவலக மேலாளர் சிவா கரும்பு அபிவிருத்தி அலுவலர் தேன்மொழி, தொழிலாளர் நல அலுவலர் பன்னீர்செல்வம், துணை தலைமைப் பொறியாளர் பார்த்திபன், துணை தலைமை ரசாயன அலுவலர் அன்புச்செழியன், கரும்பு அலுவலர் வாசுதேவன் மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Secret Link