Skip to content
Home » சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், 05.04.2024 முதல் 11.04.2024 வரை 36°-38° செல்சியஸ் வெப்பநிலையும், 12.04.2024 முதல் 25.04.2024 வரை 38° செல்சியஸ் வெப்பநிலையும், 2° செல்சியஸ் ஏற்ற இறக்கத்துடன் நிலவக்கூடும். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களால் கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது.

வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவைஃவெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்:

உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ், உப்பு சர்க்கரைக் கரைசல், எலுமிச்சைச் சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி, கரும்;புச் சாறு மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதியநேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும் மது, தேநீர், மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் வேண்டும். பொதுமக்கள் அனைவரும் நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை கூடுமான வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும்போது உடன் குடிநீர் கொண்டு செல்லவேண்டும்.

புரதம், மாமிச சத்துள்ள காரவகை உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்குமாறும், சர்க்கரைநோய், இருதயநோய், நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெளியில் சென்று வேலை செய்பவர்களுக்கு மயக்கம் வருதல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக தோன்றினால் அவ்வாறு வெப்பத்தால் தாக்கப்பட்டவரை நிழலான பகுதியில் இளைப்பாறவைத்து, குடிநீர், எலுமிச்சைசாறு, இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை கொடுத்து உடலின் வெப்பத்தை சீராக கொண்டுவரவும். அருகில் உள்ள மருத்துவரை உடனே அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதியவர்களுக்கான வழிமுறைகள் : தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்கவேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கவேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

கால்நடைகளுக்கான வழிமுறைகள் : கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்கவேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில் போடவேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்டவேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்கவேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்கவேண்டாம்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!