Skip to content
Home » தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு தாசில்தார்……. எல்லாரும் இத படியுங்க…….

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு தாசில்தார்……. எல்லாரும் இத படியுங்க…….

  • by Senthil

மயிலாடுதுறையில் மாவட்டத்தின் இரண்டாவது புத்தகத் திருவிழா இரண்டாம் தேதி துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் ,பள்ளிக்கல்வித்துறை ,பொது நூலக இயக்ககம் சார்பில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை பெருந்திரளான பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் நாள்தோறும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சீர்காழி அருகே அரசூர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் வெளியுலகமே அறியாமல் இருக்கும் செய்தி அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் எண்ணத்தில் அனைவரையும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.
இதற்காக தனது சொந்த பணத்தில் இரண்டு வேன்களை வாடகைக்கு எடுத்து அதில் 50க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை – அறிவியல் கல்லூரியில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு அழைத்து  சென்றார்.
அங்கு சென்ற மாணவிகள் அனைத்து புத்தக அரங்குகளையும், அறிவியல் சார்ந்த நிகழ்வுகளையும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு மிகவும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அதோடு மட்டுமின்றி புத்தக  காட்சியை கண்டு  மகிழ்ச்சியில் திளைத்திருந்த மாணவர்களுக்கு, அவர்கள் கேட்ட அனைத்து நூல்களையும் தனது சொந்த பணத்திலேயே வாங்கி கொடுத்து அசத்தினார் வட்டாட்சியர் இளங்கோவன்.  சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா தனது கரங்களால் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
வெளியுலகம் அறியாத இந்த மாணவர்களின் கனவுகளை நனவாக்கியத்துடன் அவர்களுக்கு தாயன்போடு வேண்டிய புத்தகங்களையும் வாங்கி கொடுத்ததை பெரிதும் பாராட்டினர் பெற்றோர்கள்.
நீண்ட நேரம் ஒவ்வொரு அரங்குக்கும் சென்று மாணவர்களை மெதுவாக புத்தகங்களை வாசிக்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் வாங்கி கொடுத்து உண்மையிலேயே அவர்களின் கனவு நாயகனாக மாறி இருக்கிறார் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன்.
வட்டாட்சியர் இளங்கோவனின் இந்த அற்புதமான செயலை கண்டு அங்கிருந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்– என்ற  மகாகவி பாரதியின் வாக்கும், ஆசியும் தாசில்தார் இளங்கோவனுக்கு கி்டைக்க நாமும் வாழ்த்துவோம்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!