திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (8) என்ற மகன் உள்ளார். துபாய் நாட்டுக்கு கார்த்திகேயன் வேலைக்கு சென்றதால். அவரது தாய் வசந்தா மனைவி மகன் ஆகியோர் அகிலா நகரில் வசித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று மனைவி வசந்தபிரியா வேலைக்கு சென்ற நிலையில் வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு தாய் வசந்தா மகன் சாமிநாதன் ஆகியோரை கொன்றுவிட்டு கார்த்திகேயன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அதில்…..மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள். எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். இந்த நிலையில் தாயும் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் என்னுடன்
அழைத்து செல்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி உள்ளதாக தெரிகிறது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திகேயன் தனது வீட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தி இருந்ததாகவும் வெளிநாட்டில் இருந்து கொண்டே தனது செல்போன் மூலம் அந்த கேமிரா வழியாக பார்த்து வந்ததாகவும், 3 நாட்களுக்கு முன்பாக அவர் சொல்லாமல் கொள்ளாமல் வௌிநாட்டில் இருந்து கிளம்பி வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.