Skip to content
Home » நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா அறக்கட்டளை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாட்டில் போலீஸ், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’ வெளியிடப்படுகிறது.

இதன்படி கடந்த 2022-ம் ஆண்டுக்கான அறிக்கை டில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, ஒட்டுமொத்தமாக நாட்டிலேயே முதல் இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது. 2-வது இடத்தை தமிழ்நாடு பிடித்திருக்கிறது. தெலுங்கானா, குஜராத், ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ஒடிசா, மராட்டியம், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சிறிய மாநிலங்களை பொறுத்தவரை நாட்டிலேயே முதல் மாநிலமாக சிக்கிம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அருணாசலபிரதேசம், திரிபுரா, மேகாலயா, மிசோரம், இமாசலபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.

தனித்தனியாக போலீஸ், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கல் என எடுத்துக்கொண்டால் சிறை மற்றும் நீதித்துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் போலீஸ்துறையில் 6-வது இடத்தையும், சட்டஉதவி வழங்கலில் 12-வது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டு அறிக்கைகளை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் நிலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. அதாவது 2019-ம் ஆண்டு போலீஸ்துறையில் முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாடு 2020-ம் ஆண்டு 5-வது இடத்தையும், 2022-ம் ஆண்டு 6-வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறைத்துறையில் 2019-ம் ஆண்டு தமிழ்நாடு 10-வது இடத்தை பிடித்திருந்தது. 2020-ம் ஆண்டு 6-வது இடத்துக்கு முன்னேறிய தமிழகம், 2022-ம் ஆண்டு முதல் இடத்தை பிடித்துள்ளது.

நீதித்துறையை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளிலும் தமிழ்நாடுதான் முதலிடம் பெற்றிருக்கிறது. சட்டஉதவி வழங்கலில் 2019-ம் ஆண்டு 12-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2020-ம் ஆண்டு 11-வது இடத்துக்கும், 2022-ம் ஆண்டு மீண்டும் 12-வது இடத்துக்கும் சென்றுள்ளது. இது மட்டுமின்றி நாடு முழுவதும் 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை, பட்ஜெட், மனிதவளம், உள்கட்டமைப்பு, பணிச்சுமை போன்ற அளவீடுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!