கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் குடும்பத்துடன் மாநில மாநாடு — பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பேட்டி
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் சிறப்பு தலைவர் பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்:
டாஸ்மாக் ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் பணி நிலையை அரசு முறைப்படுத்த வேண்டும்,
மேலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணி நிரந்தரக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.
23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, பிடித்தங்கள் போக சுமார் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும், தற்போதைய விலைவாசி சூழலில் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை.
அதேபோல், டாஸ்மாக் கடைகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவிலான ஊதியம் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். கடைகளின் தினசரி செலவுகளுடன் ஒப்பிடும்போது, தூய்மைப் பணியாளர்களுக்கான மாத ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
டாஸ்மாக் ஊழியர்களின் உழைப்புக்கு உரிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி, மதுவிலக்கு தொடர்பான கோரிக்கையையும் முன்வைத்த சங்க நிர்வாகிகள், மதுக்கடைகளை மூடிவிட்டு, நீண்டகாலமாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கினால், அந்தப் பணிக்குச் செல்லத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால், அடுத்தகட்டமாக தீவிர போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும், டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
