பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இன்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள் தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில், சந்தையில் இன்று பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்புல் சந்தையில் இருந்த பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு இந்த தாக்குதல் நடத்தியதாக அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்கள் அமைப்பு பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பெயரில் செயல்பட்டு பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
