Skip to content
Home » தம்பிதுரை மத்திய மந்திரி ஆகிறாரா?

தம்பிதுரை மத்திய மந்திரி ஆகிறாரா?

  • by Senthil

அதிமுக  எம்.பி.  தம்பிதுரை டில்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறியதாவது: டில்லியில் பா.ஜனதா தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க அவ்வப்போது தம்பிதுரையை அனுப்பி பேச வைப்பது வழக்கம். அதே போல் இந்த முறையும் தம்பிதுரை சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவையும், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசி உள்ளார்.

கர்நாடக மாநில சட்ட சபை தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோலார் தங்க வயல், பெங்களூரு மற்றும் சாம்ராஜ்நகர் பகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. இங்கு எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி உள்ளதால் கட்சியின் கர்நாடக மாநில அ.தி.மு.க. பிரிவை கூட ஜெயலலிதா தொடங்கி இருந்தார். தற்போது இந்த தொகுதியில் பிரசாரம் செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அமித்ஷாவிடம் தம்பிதுரை எடுத்துரைத்துள்ளார். அது மட்டுமின்றி கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிப்பதன் மூலம் தமிழகத்திலும் இந்த கூட்டணி தொடருவது உறுதிபடுத்தப்படுகிறது. இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் தருவது குறித்தும் அமித்ஷா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டே மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டால் அதில் தனக்கு மத்திய மந்திரி பதவி தருமாறு தம்பிதுரை கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது.   மத்திய மந்திரி பதவி மீது அவருக்கு ஆசை உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மத்திய அமைச்சரவையில் தம்பிதுரை இணைந்து விட்டால் தனக்கு நல்லது என்று எடப்பாடியும் விரும்புகிறாராம். அதன் மூலம் பாஜகவுடன் நெருக்கத்தை வளர்த்து கொள்ளவும், அண்ணாமலையை ஓரங்கட்டவும், வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது அது பயன்படும் என்றும் எடப்பாடி கருதுகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!