தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில் …..
கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இந்த சாலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் துவங்கியுள்ளன. தஞ்சாவூரிலிருந்து துவங்கப்பட்டுள்ள அந்தப் பணியானது ஒரேயொரு கட்டுமான குழுவைக் கொண்டு கும்பகோணம் நோக்கி மிகவும் மெதுவாக நடைப்பெற்று வருகின்றது. கடந்த சில வாரங்களாக பெய்துள்ள தொடர்மழை காரணமாக இந்த சாலை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைந்திட கீழ்காணும் பரிந்துரைகளை சமர்பிக்கிறேன்.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவிலிருந்து அய்யம்பேட்டை வரை ஒரு பகுதியாகவும். அய்யம்பேட்டை துவங்கி பாபநாசம் உத்தாணி வரை ஒரு பகுதியாகவும், உத்தாணி முதல் தாராசுரம் புறவழிச்சாலை வரை ஒரு பகுதியாகவும் ஆக மூன்று பகுதியாக இந்த பணிகளை, மூன்று கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேகமாக இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும்.
இந்த நெடுஞ்சாலையில் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் கட்டுமானத்தின் போது, அய்யம்பேட்டை, பாபநாசம் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பொறியாளர்கள். பேரூராட்சி மன்றத் தலைவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், பேரூராட்சி அல்லாத கிராமப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.