Skip to content
Home » தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…

தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…

தஞ்சை புது பஸ்ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது மன்னர் சரபோஜி கல்லூரி. இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300க்கும் அதிகமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்னர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை. இதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. கடமைக்கு உணவு வழங்கப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேற்று திடீரென இந்த விடுதியில் மதிய உணவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் சாப்பிட்டு பார்த்தார். அப்போது சாம்பாரில் சரியான முறையில் காய்கறிகள் இல்லை. மோர் மோசமாகவும் இருந்தது கண்டு மாணவர்களுக்கு சாம்பார், மோர் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும். உணவு தரமாக இருக்க வேண்டும் என்று விடுதி ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் மாணவர்கள் தங்கிருந்த அறைகள், கழிவறை போன்றவற்றையும் அவர் பார்வையிட்டார். அப்போது மேயரிடம் மாணவர்கள் சரமாரியாக புகார்கள் தெரிவித்தனர். விடுதியில் விளக்கு வசதிகள் சரியாக இல்லை. கட்டிடங்கள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தபடி உள்ளது. அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதால், இரவு நேரங்களில் மது அருந்தோர் விடுதி உள்ளேயே வந்து அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் வெகுவாக அச்சம் ஏற்படுகிறது. மாணவர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்துபவர்களை தட்டிக்கேட்டால் தகராறு செய்கின்றனர். சில நேரங்களில் மாணவர்களை தாக்கி செல்போன்களை பறித்துச் சென்று விடுகின்றனர். வாரத்தில் காலையில் 3 நாட்கள் இட்லி, 2 நாட்கள் தோசை, மற்றொரு நாள் உப்புமா வழங்குகின்றனர். ஆனால் உணவுகள் தரமானதாக இல்லை. விடுதியில் உள்ள அறைகளுக்கு ஜன்னல்

கம்பிகள் கிடையாது. மாணவர்கள் தங்குவதற்காக தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 32 அறைகள் உள்ளன. அறைகளும் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. விடுதிக்கு முறையாக சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். விடுதியில் விளக்குகள் சரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து அந்த மாணவர்களிடம் உணவு தரமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி உணவு சரியான முறையில் வழங்கப்படும். மற்ற புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!