தஞ்சாவூரில் உணவக உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெஜினா நகரைச் சேர்ந்தவர் டி. ஜெயக்குமார் (49). இவர் மருத்துவக்கல்லூரி மூன்றாவது வாயில் எதிரே உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகன்யா அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஜெயக்குமார் இன்று காலை 6 மணிக்கு உணவகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். இரு மகன்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு சுகன்யாவும் 9 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
மதியம் 3 மணியளவில் ஜெயக்குமார் வீட்டுக்கு திரும்பியபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் ஜெயக்குமார் புகார் செய்தார். இதன் பேரில் மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.