Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னைக்கு 840 டன் வெங்காயத்தை அனுப்பும் மத்திய அரசு

பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது.

டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பு நடவடிக்கையாக, கண்டா எனப்படும் சிறப்பு சரக்கு ரயில்களில் வெங்காயத்தை மத்திய அரசு முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

சமீபத்தில் கண்டா எனப்படும் சிறப்பு சரக்கு ரயில்களில் டில்லிக்கு 500 டன் வெங்காயத்தை அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 29) தனது கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை சென்னைக்கு மத்திய அரசு அனுப்ப உள்ளது.

மன்மாட் பகுதியில் வெங்காயம் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல நகரங்களில் சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.65 வரை உயர்ந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, இருப்பு வைக்கப்பட்ட வெங்காயத்தை சாலை வழியாக விநியோகிக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களில், இரண்டு லாரி டில்லி மற்றும் குவஹாத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன; மேலும் பல நகரங்களுக்கும் சரக்குகளை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிக விலை நிலவும் சந்தைகளுக்கு விநியோகத்தை விரைவுபடுத்தவே ரயில் மற்றும் சாலை வழிப் போக்குவரத்து ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலை உயர்வைத் தடுக்க, நாபெட் மற்றும் என்சிசிஎப் ஆகியவை மூலம் 1.21 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. கண்டா எக்ஸ்பிரஸ் வாயிலாக மத்திய அரசு அனுப்பி வைக்கும் வெங்காயம், நாபெட், என்சிசிஎப் மற்றும் கேந்திரிய பண்டார் விற்பனை நிலையங்கள் மூலம் கிலோவுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்கப்படுகிறது.

டில்லி, சென்னையை தவிர எர்ணாகுளம், மதுரை மற்றும் குவஹாத்தி ஆகிய நகரங்களுக்கும் ரயில் மூலம் வெங்காயம் அனுப்பப்படலாம் என்று நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாசிக்கில் உள்ள மொத்த விற்பனை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையான லாசல்கான் ஏ.பி.எம்.சி-யில், கடந்த நான்கு நாட்களில் சராசரி விலை 10% குறைந்துள்ளது; அதாவது குவிண்டாலுக்கு ரூ.4,250ஆக இருந்த விலை ரூ.3,800ஆகக் குறைந்துள்ளது. முக்கிய சந்தைகளுக்கு மத்திய அரசின் கையிருப்பில் இருந்து வெங்காயம் விடுவிக்கப்பட்டதே இந்த விலை சரிவிற்குக் காரணம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

error: Content is protected !!