தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது… போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு…
சிறப்பான வெற்றியை திமுக கூட்டணி பெற்று தமிழ்நாடு 2.0 ஆட்சி காண இருக்கிறது… அமைச்சர் சிவசங்கர்
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், தனது குடும்பத்துடன் வருகை தந்து வரிசையில் நின்று, தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஸ்டாலின் திட்டங்களால் தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது. மிகப்பெரிய வெற்றியை திமுக தலைமையிலான மதசார்பற்ற

முற்போக்கு கூட்டணி பெற இருக்கிறது. இந்த கூட்டணியின் பலத்தினால், சிறப்பான வெற்றி இந்த தேர்தல் பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக 2.0 ஆட்சி காண இருக்கிறது என்று கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப் பட்சமாக இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல இடங்களில் சந்தேகத்தை எழுப்புகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகள் எல்லா சந்தேகங்களுக்கும் மூல காரணமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அதிகாரிகளை எந்த தேவையும் இன்றி மாற்றி உள்ளது. குறிப்பாக கடைசி இரண்டு நாட்களில் மாற்றுவது எல்லாரிடமும் ஒரு பயத்தை உண்டாக்குவதற்காக நடவடிக்கையாக தோன்றுகிறது. குழுவின் மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையர், பிரதமர் மோடியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் அவரை நடவடிக்கைகள் தமிழகத்தில் அதனை உறுதி செய்வதாக கூறினார்.
தமிழகத்தில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதும், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதும் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், அதிமுக வேட்பாளர்களின் பல இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சியினரின் இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக இதற்கு காரணம் என்று ஊடக மூலம் தெரிய வருகிறது என்று கூறினார்.
குன்னம் தொகுதியில் அதிமுக மற்றும் ஐஜேகே கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், டோக்கன் என்ற பெயரில் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். அதனை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். இவர்களைப் போன்றவர்களை எல்லாம் பார்த்தவர்கள் தான் தமிழக மக்கள். இவர்கள் ஏமாற்று வேலைக்கு யாரும் பலியாக மாட்டார்கள். அவர்கள் நடத்துகின்ற நிறுவனங்களில் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை நம்முடைய மக்கள் அறிவார்கள். இவை எல்லாம் பலிக்காது என்று கூறினார்.
