Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமரின் மவுனம் கண்டிக்கத்தக்கது!- மாணிக்கம் தாகூர்

மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வரின் கருத்துக்கு பிரதமர் மவுனமாக இருந்தது கண்டிக்கதக்கது

காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் தகவல்

தஞ்சாவூர் மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக முதல்வர் டிகே.சிவக்குமார் மைசூரில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவித்தமைக்கு பிரதமர் மோடி மவுனமாக இருந்தது கண்டிக்கதக்கது என காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு மண்டலத் தலைவர் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 690 மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
வரும் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியைத் தயார்படுத்துவதும், ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதும் இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். ராகுல் காந்தி பிரதமரானால் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்குவார், தமிழகத்துக்கு எவ்வாறு நியாயமான உரிமைகள் கிடைக்கும் என்பது குறித்து மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கு விளக்கப்படுகிறது. வாக்குத் திருட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வரும் தேசிய அளவிலான பிரசாரத்தை அடுத்தகட்டமாக தெருமுனைப் பிரசாரமாகக் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம்.
குழந்தைகள் தின விழாவில் முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை என்று கூறி சிலர் பிரச்சினையை எழுப்புகின்றனர். நேருவின் பிறந்தநாளான நவ. 14-ம் தேதிதான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேருவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பு அனைவரும் அறிந்த ஒன்று. சுதந்திர தினம் என்றால் மகாத்மா காந்தியும், குடியரசு தினம் என்றால் அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும் நினைவுக்கு வருவதைப் போல, குழந்தைகள் தினம் என்றால் நேருவின் பிறந்தநாள்தான் நினைவுக்கு வருகிறது. பள்ளிகளில் குழந்தைகள் நேருவைப் போன்ற உடையணிந்து விழாவில் பங்கேற்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி அரசியல் பிரச்சினையாக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது அவருடைய கருத்து. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு நான் தனிப்பட்ட முறையில் பதில் கூற விரும்பவில்லை. எங்களுடைய கட்சியையும் கூட்டணிக் கட்சிகளையும் பொதுவெளியில் விமர்சிக்காமல் இருப்பதே எங்களுடைய அரசியல் பண்பாடு. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன்.
ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அதேபோல் தமிழகத்தில் விஜய் முதல்வராக இருக்க வேண்டும் என்பதும் எங்களுடைய நிலைப்பாடு. காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கேற்க வேண்டும். அந்த ஆட்சி நேர்மையானதாகவும் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரின்றி கருகும் சூழல் நிலவுகிறது. இத்தகைய நிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகேதாட்டுது அணை தொடர்பாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தில் தேவகவுடா, எடியூரப்பா, குமாரசாமி, டி.கே.சிவகுமார் என யார் ஆட்சியில் இருந்தாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்கு உரிய முறையில் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கர்நாடகத்தில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், காவிரி நடுவர் மன்றம் ஒவ்வொரு மாதத்துக்கும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. அந்த உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது. கர்நாடக முதல்வர் டிகே.சிவக்குமார் பேசியபோது பிரதமர் மோடியும் அந்த மேடையில் இருந்தார். அதற்குப் பிறகே பிரதமர் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர் பதில் அளித்திருக்க வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் அரசியல் பேச்சுகளுக்கு இடமில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வரின் கருத்துக்கு பிரதமர் மவுனமாக இருந்தது தமிழக மக்கள் சார்பில் கண்டிக்கதக்கது.
கர்நாடகத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலையம், ஜி.எஸ்.டி. நிதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தமிழக விவசாயத்தைப் பாதிக்கும் தண்ணீர் பிரச்சினையை பிரதமர் முன்னிலையில் எழுப்பியபோது அதற்கு உரிய பதில் அளிக்காதது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி பாஜகவைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், அவர் இந்தியாவின் பிரதமர். தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதை அவர் அனுமதிக்கக்கூடாது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களுடன் ஒப்பிடும்போது தற்போது குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அரசு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அரசுப் பணிகளை மேற்கொள்ளும்போது லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை குறைந்துள்ளது.. டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் லஞ்சம், ஊழல் என்பது புற்றுநோயைப் போலப் பரவி இருந்தது. அதனைத் தடுக்க தமிழக அரசு பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது இந்த அரசின் சாதனையாக பார்க்கிறேன். பள்ளி, நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் தொடர்பாகவும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுமார் 70 ஆயிரம் புத்தகங்கள் தொடர்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான கணக்குகள் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். யாருக்கு கமிஷன் சென்றது என்பதும் கண்டறியப்பட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் அரசியல் அணுகுமுறையும் அவரைச் சுற்றியுள்ள சிலரின் செயல்பாடுகளும் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதுகிறேன். திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் தவறு செய்தவர்கள் அல்ல. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் காரணமாக கட்சியின் உண்மையான தொண்டர்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்துடனான காங்கிரஸ் கூட்டணி நீண்டகால உறவாக இருக்கும். கூட்டணியை முறித்துக்கொள்வது அல்லது மற்றவர்களைக் கழற்றிவிடுவது போன்ற எண்ணம் எங்களிடம் இல்லை. விஜய் அவர்களும் இந்த உறவை நீண்டகால உறவாகவே கருதுகிறார். மற்றவர்கள் தேவையில்லாமல் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஒற்றுமையாகவும் தெளிவாகவும் இருக்கிறோம்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியதாகச் சொல்லப்படும் தகவல் குறித்து ஏற்கெனவே சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். நடைபெறாத ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்துவதில் அர்த்தமில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகும் அனைத்துத் தகவல்களுக்கும் அரசியல் தலைவர்கள் பதில் அளிக்க முடியாது. ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!