Skip to content
Home » குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..

குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..

  • by Senthil

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சார்ந்தவர் தீரஜ் ராமகிருஷ்ணா.( 29).  இவர் பி.ஈ. பட்டப்படிப்பு படித்துள்ளார். இயற்கை வேளாண்மை மீது பற்று கொண்டு இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டு கால்நடைகளை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நாட்டு பசு இனங்களைப் பாதுகாக்கும் வகையில் மாட்டுப் பண்ணை அமைத்து அவற்றை வளர்த்தும் வருகிறார்.

மேலும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தேங்காய் உறிக்கும் இயந்திரம், தேங்காய் உடைக்கும் இயந்திரம், பால் கரக்கும் இயந்திரம், தீவனம் அறுக்கும் இயந்திரம் என பல்வேறு வகையான இயந்திரங்களை குறைந்த விலையில் உருவாக்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இவருக்கு சிறந்த விவசாயிக்கான விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் சிறுகுறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையிலான தீவனம் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.

விவசாயிகள் விரும்பிய இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ள இந்த இயந்திரமானது 1 ஹெச்.பி மோட்டார், பிளேடு மற்றும் பிரேம் ஆகியவை கொண்டு வடிமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்தில் 500 கிலோ பசுந்தீவனங்களை வெட்டக்கூடிய திறன் படைத்தது. கால்நடைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சிறுசிறு

துண்டுகளாக பசுந்தீவனங்களை வெட்டும் வல்லமை கொண்டது. எளிதாக பராமரிக்க முடியும்.

கையாளுவதற்கு எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் விலை அனைத்து வரியினங்கள் உட்பட ரூ. 10 ஆயிரம் ஆகும். இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பழுதடைந்தாலும் அவர்களே சரி செய்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த இயந்திரத்தில் கோ- 4, கோ- 5, 5 நேப்பியர், சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்கள் மற்றும் மல்பரி, வாழைக்கன்றுகள் போன்றவற்றை வெட்ட முடியும்.

இதுகுறித்து திரஜ் ராமகிருஷ்ணா கூறியது…. சிறிய விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரசாதமாகும். மிகக் குறைந்த விலையுடைய இதனை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு

பார்சலில் அனுப்பி வைக்கிறோம். கூடுமானவரை இதில் பழுதாகும் வாய்ப்பே இல்லை. இதனை வாங்கியவர்களுக்கு அதை இயக்குவதிலோ இல்லை வேறு இடர்பாடு ஏதாவது இருந்தாலும் 5 நாட்களுக்குள் இந்த இயந்திரத்தை நாங்களே மீண்டும் திருப்பி வாங்கிக் கொள்கிறோம்.

பராமரிப்பிற்கு எளிதாகவும், விவசாயிகள் கையாளுவதற்கு எளிமையாகவும் இருக்கும் வகையில் மிகச் சிறிய அளவில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள்,பண்ணைக் கூலித் தொழிலாளர்கள் என யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். தரமான பொருட்களைப் பயன்படுத்தி இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சிறு குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அனைத்து வகை விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தீவனம் அறுக்கும் இயந்திரம் விவசாயிகளிடையே தற்போது பெரும் வரவேறப்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!