திருட போன வீட்டில் இருப்பதை வாரி சுருட்டிக்கொண்டு, மது அருந்தி தூங்குவது, ஆம்லெட் போட்டு சாப்பிடுவது போன்ற வித்தியாசமான செயல்களை கொள்ளையர்கள் சில இடங்களில்அரங்கேற்றியுள்ளனர். சில கொள்ளையர்கள் வீட்டில் எதுவும் இல்லாவிட்டால் பொருட்களை உடைத்து போட்டு விட்டு செல்வார்கள். ஆனால் டில்லியிலோ ஒரு திருட்டு கும்பல் கருணை உள்ளத்தோடு நடந்திருக்கிறார்கள். அது என்னவென்று பார்ப்போம்.
டில்லி ரோகிணி செக்டார் 8-ல் வசிக்கும் வயதான தம்பதியினர் கடந்த 19-ந்தேதி அன்று குர்கானில் உள்ள மகனை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுடைய வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பக்கத்து வீட்டுக்காரர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்து எந்தவொரு பொருளும் காணாமல் போகவில்லை.
ஆனால் வீட்டில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் திருடர்கள் ரூ.500 நோட்டை கதவருகே வைத்து விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வடக்கு ரோகிணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, தம்பதியிடம் கொள்ளையடிக்க முயன்ற 2 திருடர்கள் அவர்களிடம் ரூ.20 இருப்பதை பார்த்து அவர்களுக்கு ரூ.100 கொடுத்துள்ளனர். இச்சம்பவம் கிழக்கு டில்லியின் ஷஹ்தராவில் உள்ள ஃபர்ஷ் பஜார் பகுதியில் நடைபெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இக்காட்சிகளை வைத்து கொள்ளையர்களை நொய்டா போலீசார் கைது செய்தனர்.
என்னதான் இரக்க சிந்தனையுடன் பணத்தை வைத்து விட்டு சென்றாலும் அவர்கள் நோக்கம் கொள்ளை தான். எனவே அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் தான்.