கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.294 கோடியில் 1,237 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அய்யன் திருவள்ளுவர் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கன்னியாகுமரி தனித்துவமான மாவட்டம். எல்லை போராட்ட வீரர்கள் மார்ஷல் நேசமணி, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்டோர் பிறந்தமண் குமரி. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தனித்துவமான மாவட்டம் கன்னியாகுமரி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4,260 கோடியில் 34 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4,119 கோடியில் 11,690 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” இவ்வாறு தெரிவித்தார்.
